- Views 36
- Likes
10000 வெள்ளி திரட்டித் தந்த ‘பயணங்களும் பாடங்களும்’
15-02-2025 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் யூசுப் ராவுத்தர் ரஜித்தின் பயணங்களும் பாடங்களும் என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் வெளியீடு கண்டது. இந்த நூலில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த வாழ்க்கையில் வெற்றிபெற்ற 10 தலைவர்களின் பயணம் பாடமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திரு தேவேந்திரன் (தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரீ நாராயண மிஷன்), திரு கார்த்திகேயன் (மேனாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்), திரு மனோகரன் சக்கரபாணி (தொழிலதிபர்), திரு மனோகரன்சுப்பையா (கல்வியாளர்), திரு புஷ்பலதா கதிரவேலு (பல்கலை வித்தகி), திரு ராஜாராம் (சட்டத்துறை முன்னோடி), திருசரோஜினி பத்மநாதன் (ஓய்வுபெற்ற மனிதவள அதிகாரி), டாக்டர் உமாராஜன் (சுகாதாரத்துறை முன்னோடி), திரு விஸ்வாசதாசிவன் (ஊடகவியலாளர்), டாக்டர் சகபர் அலி (தொழில் ஆலோசகர்), ஆகிய 10 தலைவர்களின் வாழ்க்கையை சுருக்கமாகப் பேசுகிறது இந்த நூல். நூல் வெளியீட்டில் கிடைக்கும் நிதி ஸ்ரீ நாராயண மிஷனுக்கு நன்கொடை வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க பலர் ஸ்ரீ நாராயண மிஷனுக்கு முன்கூட்டியே நன்கொடைகளை அனுப்பிவிட்டனர். திரு அப்துல் ஜலீல், திரு மனோகரன் சக்கரபாணி, சட்டத்துறை முன்னோடி திரு ராஜாராம் ஆகியோர் ஸ்ரீ நாராயண மிஷனுக்கான தங்களின் சிறப்பு நன்கொடைகளை அளித்தனர். மேலும் நன்கொடைகள் வந்துகொண்டிருப்பதாக ஸ்ரீ நாராயணமிஷனின் பொருளாளர் குழு அறிவித்திருக்கிறது.
நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கும் வகையில் செல்வி கற்பகம் விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட அனைவரும் எழுந்துநின்று மரியாதை செய்தனர். தொடர்ந்து P B க்ஷூரஜா பாரம்பரிய நடனம் ஆடி நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார். ஸ்ரீ நாராயண மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி திரு தேவேந்திரன் JP அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தலைவர்கள் சார்பாக திரு விஸ்வா சதாசிவன் இந்த நூல் ஏன் தேவை என்ற காரணத்தை விளக்கும்போது, நாட்டின் சரித்திரம் என்பது ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் இருக்கிறது என்று தெளிவுபடுத்தினார். தொடர்ந்து நூலாசிரியர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் பேசினார். பத்து தலைவர்களின் வாழ்க்கையைச் சொல்வதற்காக மட்டும் இந்த நூல் எழுதப்படவில்லை என்றும் அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டபோது இந்த நாட்டையும் வளர்ச்சியடையச் செய்தார்கள் என்றும் வளர்ச்சியடைந்த நாடு அவர்களுக்கு மேலும் புகழ் சேர்த்தது என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இணைப்பேராசிரியர், டாக்டர் முகம்மாட் ஃபைசால் இப்ராஹிம் (துணை அமைச்சர், உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சித்துறை) பேசும்போது ஒவ்வொருவர் பயணமுமே அடுத்த தலைமுறைக்கு பாடமே என்றும் வளரும் தலைமுறை இதுபோன்ற நூல்களைப் படித்து தங்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
அமைச்சர் கையெழுத்துடன் கூடிய நூல்கள் முதலில் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின் சிறப்பு நன்கொடை அளித்தவர்கள் பாராட்டப்பட்டார்கள். அதன்பிறகு மற்றவர்கள் நூலினை நூலாசிரியரிடம் பெற்றுக்கொண்டார்கள். திரு பிமல்ராம் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக வழிநடத்த, ஒளிஒலி நிர்வாகத்தை செல்வன் முகம்மது பிலால் ஆகில் கவனித்துக்கொண்டார். திருமதி வானதிபிரகாஷ், திருமதி அன்னபூரணி கார்த்திகேயன், திருமதி ஸ்ரீதேவி, செல்வி கற்பகம் விஸ்வநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான தொண்டூழியங்களை சிறப்பாகச் செய்துகொடுத்தனர். சரியாக 6 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்தி; தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்.