- Views 135
- Likes
24 மார்ச் 2023 மாலை நேரத்தில் நல்லதொரு செறிவான நிறைவான மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திடச் சிறப்பாகப் பங்களித்திட்ட முனைவர் ராஜி சீனிவாசன் அவர்களுக்கு நமது பாராட்டுதலும் நன்றியும் உரித்தாகுக!
தமிழ்ப் பட்டமன்றக் கலைக் கழகத்தின் தலைவர், மதியுரைஞர், துணைத் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட செயலவைக் குழுவினர்கள் மற்றும் ஆயுள் உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முத்தான மாணவர்கள் உயர்நிலைப் படிப்பிலிருந்தாலும் சத்தான கெத்தான வகையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்தனர். பல்லினக் கலாச்சார நடைமுறையில் சுய கலாச்சாரத்தைப் பேணுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சிரமங்கள் பலவற்றையும் அவர்களுக்கேற்பட்ட அனுபவங்களைக்கொண்டு நயம்படப் பேசினர். அனைவரும் ரசித்து விரும்பிக் கேட்கும் வண்ணத்தில் திறமையான மேடைப் பேச்சாளர்கள் போல தமிழில் இயல்பாகப் பேசியது பார்வையாளர்களை வியக்கவைத்தது என்பது மிகையல்ல.
கருத்தரங்கத்தில் செம்மையான கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்பாக வழிநடத்திய தமிழாசிரியர் திரு கும்பலிங்கம் உத்தமன் கல்வியாளர் என்ற முறையில் பல நல்ல சுவாரசியமான தகவல்களைக் குறிப்பிட்டு அவையோர் சிந்திக்கும் வகையில் கருத்தரங்கைப் படைத்திட்டார். அவர்களுக்கும் மிக்க நன்றி!
தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள எழுத்தாளர் மற்றும் நடிகர் திரு வேல ராமமூர்த்தி அவர்களின் சிறப்பான உரையில் தமது வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளின் கோர்வையில் சுய கலாச்சாரத்தைப் பின்பற்ற தனக்கு ஏற்பட்ட சவால்களை அனைவரும் கேட்டு மகிழ்ந்து உணரும் வண்ணம் தனது உடல்மொழி மற்றும் வட்டார வழக்கு நடையில் கூடிய சொல்லாடலோடுப் பேசி எல்லோரையும் கவர்ந்தார். அவருக்கும் நமது சிறப்புப் பாராட்டுக்கள் மற்றும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விழாவினைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்திட இட ஆதரவும் நிதி ஆதரவுமளித்து உதவிய சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்திற்குச் சிறப்பான நன்றி!
திரளாக வந்திருந்து வெற்றிகரமான நிகழ்வாக உருவாக்கியப் பார்வையாளர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!