- Views 1165
- Likes
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின்
மொழிபெயர்ப்புப் போட்டி மற்றும் 125 நிகழ்வுகளின் நிறைவு மலர் வெளியீடு
500க்கும் மேற்பட்ட தொடக்கநிலை மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி 17 ஆகஸ்ட் , ஞாயிற்றுக்கிழமை விக்டோரியா சலையிலுள்ள தேசிய நூலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணியளவில் கழகத்தின் சிறப்பு மலர் வெளியீடு இடம்பெற்றது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சமாதான நீதிபதியும், மேனாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு இரா. தினகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக எல்லா தொடக்கநிலைப் பள்ளிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அனுப்பிய நாளிலிருந்தே மாணவர்களின் பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன. பெற்றோர்கள் ஏற்பாட்டுக் குழுவினரிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு எந்த மாதிரி சொற்கள் கேட்கப்படும், தேசிய நாள் கொண்டாட்டம் தொடர்பாக சொற்கள்தான் கேட்கப்படுமா? பாடப்புத்தகங்களில் தரப்படும் சொற்களா? பொதுவான சொற்களா? பொதுவான சொற்ளென்றால் எந்தமாதிரிச் சொற்கள்? என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்ததில், ஒன்றுமட்டும் உறுதியாகப் புரிந்தது. தமிழுக்கான இதுபோன்ற போட்டிகளுக்கு மாணவர்களிடையே ஆதரவு மட்டுமல்ல, பெற்றோரிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் தெளிவானது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இந்தப் போட்டிகளை அடுத்த ஆண்டுமுதல் இன்னும் சிறப்பாக நடத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எல்லாரிடமிருந்தும் வெளிப்பட்டது
நண்பகல் 1 மணியளவில் பதிவுசெய்துகொண்ட தொடக்கநிலை மாணவர்களுக்கான சரிபார்ப்புகள் தொடங்கின. ஏற்கனவே அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்ததால் மிகப்பெரிய ஆதரவு தரும்வகையில் மாணவர்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சியளித்தது. போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
தொடக்கநிலை 1,2,3 மாணவர்களுக்கு தளம் 1ல் அமைந்திருக்கும் விசிட்டர் ப்ரீஃபிங் அறையில் (Visitors briefing room) நடத்தப்பட்டது. தொ.நிலை1.2.3 வகுப்புகளுக்கும் மூன்று தொண்டூழியர்கள் பதிவுகளைச் சரிபார்த்தனர். அவர்களுக்கான எண்கள் தரப்பட்டு பிறகு தேர்வு நடக்கும் அறைக்கு அனுப்பப்பட்டார்கள். தகுதிமிக்க 5 ஆசிரியர்கள் தேர்வை நடத்தினர். மாணவர்களுக்குத் தரப்படும் 10 ஆங்கிலச் சொற்களுக்கு அவர்கள் சரியான தமிழ்ச்சொற்களைத் தரவேண்டும். இந்தப் பிரிவில் மட்டும் கிட்டத்தட்ட 280 மாணவர்கள் பதிவு செய்திருந்தார்கள். அனைவருக்குமான தேர்வுகள் தொடந்து விறுவிறுப்பாக நடந்து, சுமார் 4மணியளவில் நிறைவடைந்தது.
இதேபோல் தளம் 5ல் தொடக்கநிலை 4,5,6 மாணவர்களுக்கான பதிவுகளும் 3 தொண்டூழியர்களின் உதவியுடன் சரிபார்க்கப்பட்டு, போட்டிக்கான எண்கள் தரப்பட்டு அவர்களுக்கான தேர்வு அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். இங்கும் 5 ஆசிரியர்கள் மாணவர்களின் மொழிபெயர்ப்பு ஆற்றலை, 10 சிறு வாக்கியங்கள் தந்து சோதித்து அவரவர்களுக்கான மதிப்பெண்களைத் தந்தார்கள். இந்தப்பிரிவிலும் 200க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
அனைத்து மாணவரகளின் மதிப்பெண்களையும் ஒப்பிட்டுப்பார்த்து, அவர்களில் மிச்ச்சிறப்பாக செய்த 20 பேர் ஒவ்வொரு குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த 20 மாணவர்கள் இரண்டு இரண்டு மாணவர்கள் கொண்ட பத்துக்குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டாம் சுற்றுத் தேர்வுக்கு அனுப்பப்பட்டார்கள். அணிபிரிப்பது எந்தத் தரவரிசையும் இன்றியே செய்யப்பட்டது. இரண்டாம் சுற்றுப் போட்டிகள் தளம் 5ல் இருக்கும் பாசிபிலிடி அறையில் (Possibility Room) நடத்தப்பட்டது. பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உணவுப்பொட்டலங்கள், மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தமிழ்ப்பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான முனைவர் ராஜேஸ்வரி ஸ்ரீநிவாசன் அவர்கள் பார்வையாளர் முன்னிலையில் ஆங்கிலச் சொற்கள் தர, அதை மாணவர்கள் தமிழில் மொழிபெர்ர்த்துச் சொன்னார்கள். மிகவும் கடினமான சொற்களுக்குக் கூட அவர்கள் மிகச்சிறப்பான தமிழ்ச்சொற்களை வழங்கியதில் அரங்கம் நிறைந்த கைதட்டல்கள் எழுந்தன. முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்பரிசு 120வெள்ளி, இரண்டாம் பரிசாக 80வெள்ளி, மூன்றாம் பரிசாக 60 வெள்ளியுடன். இரண்டு ஊக்கப்பரிசுகள் தலா50 வெள்ளியென வழங்கப்பட்டது. சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இரண்டாம் சுற்றில் இடம்பெற்ற 40 மாணவர்குக்கும் பாப்புலர் பற்றுச்சீட்டு மற்றும் நூல்களும் பரிசாக வழங்கப்பட்டன. இரண்டாம் சுற்று முடிவடைந்தது
சரியாக 7 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பெற்றார்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சிறப்பான இரவு விருந்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
அதிக அளவில் மாணவர்கள் கலந்துகொண்டது, தமிழ்மொழிக்கான நல்ல எதிர்காலம் சிங்கப்பூரில் இருக்கிறது என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது.
செய்தி ; தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (சிங்கப்பூர்)
மொழிபெயர்ப்புப் போட்டி 17-08-2025 மாலை 1.30
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தொடர்ந்து பதினைந்தாவது ஆண்டாக நடத்தும் மொழிபெயர்ப்புப் போட்டி பற்றிய சில முக்கியத் தகவல்கள்















